இந்தியாவின் 17-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தேதி தொடங்கி மே 19 முடிவடைகிறது. மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் சில மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், சில மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவுற்றது.
இதில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன், திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக நவாஸ் கனி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக புவனேஸ்வரி, மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக விஜயபாஸ்கர் உள்ளிட்ட 36 பேர் இன்றுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல், பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு அதிமுக, திமுக, அமமுக, சுயேட்சை வேட்பாளர்கள் என 21 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப் பெற 28 ஆம் தேதி கடைசி நாளாகும் இறுதி வேட்பாளர் பட்டியல் 29 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.