ராமநாதபுரம்: பாஜகவைத் தவிர வேறு எந்தக்கட்சியாலும் கட்சத்தீவை மீட்கமுடியாது என்றும் கட்சத்தீவை மீட்கவேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்குகளை துரிதப்படுத்த அதிமுக, திமுக கட்சிகள் முன்வரவில்லை என்றும் பாஜக வழக்கறிஞர் மவுரியா தெரிவித்தார்.
இதுதொடர்பாக ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "1974ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை நாடுகளின் ஒப்பந்தப்படி இருநாட்டு மீனவர்களும் எல்லைதாண்டி தங்களது பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிகளில் மீன்பிடித்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், 1976இல் இருநாடுகளும் கடித பரிமாற்றத்தின் மூலம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளன, இது செல்லாது, மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கவேண்டும். இதுசெல்லாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கில் மத்திய அரசு முடிவு எடுக்கவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக எனது தந்தையும், மீனவர் பாதுகாப்பு பேரவையின் தலைவருமான பீட்டர் ராயப்பன் உச்ச நீதிமன்றத்தில் கட்சத்தீவை மீட்கவேண்டும் எனவும், 1974 ஒப்பந்தத்தை செயல்படுத்தவேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், அதிமுக, திமுக சார்பில் கட்சத்தீவை மீட்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை துரிதப்படுத்த அதிமுக, திமுக முன்வரவில்லை. கட்சத்தீவை மீட்டால் என்ன நன்மை என்பதை மீனவ மக்களைச் சந்தித்து இயக்கம் நடத்தவுள்ளேன். பாஜகவைத் தவிர வேறு எந்தக்கட்சியும் கட்சத்தீவை மீட்கமுடியாது" என்றார்.
இதையும் படிங்க: ’கச்சத்தீவு முதல் நீட் தேர்வு வரை திமுக இரட்டை வேடம்’