ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது பிறந்தநாள் விழா, 57ஆவது குருபூஜை நடைபெற்றது. இதனையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்பின்னர், அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விதமான கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். அவை அரசியல் களத்தில் பேசுபொருளாய் மாறியுள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் எனக் கருதி வாழ்ந்துவந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அவரது பிறந்த நாள் அரசு விடுமுறையாக அறிவிப்பது குறித்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பரிசீலிக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார்.
இக்கருத்து அந்த சமுதாய மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் பொதுசமூகத்தில், ஸ்டாலின் சாதிய அரசியலை கையாளுகிறாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஏனென்றால் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் பரப்புரையின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் சமுதாய மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்து ஆளும்கட்சியினரை வாயைப் பிளக்கவைத்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
அதிக நாள்கள் சிறையிலிருந்த தலைவர்களுள் முத்துராமலிங்கத் தேவரும் ஒருவர். அவரது விருப்பமாக சாதிய ஒற்றுமை மனிதநேயமிக்க சமுதாயம் மென்மேலும் வளர வேண்டும் என்றார்.
டிடிவி தினகரன்
முத்துராமலிங்கத் தேவர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு தேசிய தலைவராக இருந்தவர். ஆகவே அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார். ஏற்கனவே பாரத ரத்னா விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் டிடிவி தினகரனின் கோரிக்கை நிறைவேறுமா என்பதை, மதுரை விமான நிலையத்திற்கு 'முத்துராமலிங்கத் தேவர்' பெயரை வைக்க தொடர்ந்து வலுக்கும் கோரிக்கையாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
திருநாவுக்கரசர்
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த மலர் வளையத்துடன் திருநாவுக்கரசர் சென்றபோது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து திருநாவுக்கரசர் கூறுகையில், "நான் 40 ஆண்டாக தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செய்துவருகிறேன். மலர் வளையம் வைக்கக் கூடாது என்பது எனக்குத் தெரியாது அவர்களது கோரிக்கையை நான் மதிக்கிறேன்" எனக் கூறினார்.
இவர்களைத் தொடர்ந்து பசும்பொன்னில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இருவரும் தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று தெரிவித்தனர்.