ராமநாதபுரம் மாவட்டம், அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா சிகிச்சைகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி ஆய்வு செய்தார்.
மேலும் கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார், சட்டப்பேரவை உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோரும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். ஆய்வுப் பணியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்பட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
ஆய்வுப் பணியை நிறைவு செய்த பின்னர் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி கூறுகையில்,“ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வழங்கப்படும் கரோனா சிகிச்சைகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாவோருக்குச் சிகிச்சை வழங்கிட ஏதுவாக போதியப் படுக்கைகள், ஆக்ஸிஜன் உட்பட உயிர் காக்கும் மருந்துகள் போதிய அளவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தொற்று பாதிப்பு முற்றிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் உயிர் இழக்கும் வருந்தத்தக்க நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அறிகுறிகள் தென்படும் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவமனையில் அனுமதி பெற்று, உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்த்திட முடியும்” என்றார்.
இதையும் படிங்க : வெளியே சுற்றிய கரோனா நோயாளிகளுக்குத் தலா ரூ.2 ஆயிரம் அபராதம்!