செப்டம்பர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் உலக தூய்மை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்தப் பேரணி விவேகானந்தர் பள்ளி வளாகத்தில் தொடங்கி தேவிபட்டினம் நவபாஷாணம் கடற்கரையில் நிறைவடைந்தது. மாணவ மாணவியர் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்காததால் ஏற்படும் விளைவுகள் குறித்து பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் சென்றனர்.
இதனிடையே, மாணவர்களிடம் ஆட்சியர் வீரராகவ ராவ் பேசுகையில், "ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க 2019 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் நெகிழித் தடைசெய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நெகிழிக்கு மாற்றாக உள்ள வாழை இலை, பனை ஓலை சார்ந்த பொருட்கள் மற்றும் இன்னபிற பொருட்களை பயன்படுத்தும்படி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவருகிறது" என்று தெரிவித்தார்.