நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஊரடங்கு 45 நாட்களைக் கடந்துள்ள நிலையிலும், பிற மாநிலங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாநில அரசும் மத்திய அரசுகளும் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 45 நாட்களுக்கு மேல் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் பலர், தங்களை உடனடியாக சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற கோரிக்கையுடன் ஆட்சியர் அலுவலத்தை இன்று முற்றுகையிட குவிந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த காவல் துறையினர், உயர் அலுவலர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தக்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, வெளி மாநில தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ராமநாதபுரத்தில் மட்டும் சுமார் 3000க்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒடிசா, பீகார், உத்தரப் பிரதேசம், கொல்கத்தா மாநிலங்களைச் சேர்ந்த இந்த வெளிமாநில தொழிலாளர்கள், உணவு, கட்டுமான தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘மலேசியாவில் இருப்பவர்களை மீட்கலாம்; மகாராஷ்டிரா முடியாதா?’ - உயர் நீதிமன்றம் கேள்வி