ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர்மொகிதீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "இலங்கை அரசு கச்சத்தீவு அருகே கடலில் பழைய பேருந்துகளை போட்டுள்ளது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் பேருந்துகளை கடலில் போட்ட இலங்கை அரசை மத்திய அரசு தட்டிகேட்க வேண்டும். கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிரதமரை சந்திக்க டெல்லி செல்லும் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி, கரோனா தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பிவைக்கவும், செங்கல்பட்டு மருந்து தொழிற்சாலையை தொடங்கவும் வலியுறுத்த வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி
ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த ஒரு மாத காலத்தில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறது. மத்திய அரசு சிஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் 13 மாநில மாவட்ட ஆட்சியர்களுக்கு பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து குடியுரிமை கேட்டு வருபவர்களுக்கு இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்களுக்கு வழங்கலாம் என உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நீதிமன்றத்தில் மத்திய அரசு இரண்டு வார கால அவகாசம் கேட்டுள்ளது" என்றார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் அன்சாரி, மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.