ராமநாதபுரம் மாவட்டம் நத்தக்கோட்டைக் கிராமத்தில் அமைந்துள்ளது முனியய்யா கோயில். இந்தக் கோயிலின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்து உண்டியலை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இதனையடுத்து இதுதொடர்பாக கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் திருவாடானை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளைக் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, அதில் வெள்ளை நிற சட்டை அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோயில் பூட்டை உடைக்க முயல்கிறார்.
அதில் அந்நபர் தோல்வியடைய உடனே அருகே இருக்கும் சூலத்தை எடுத்து கோயிலின் கதவை உடைத்து, உண்டியல் மற்றும் சில பொருள்களைத் திருடிச் சென்றார்.
அதன்பேரில் திருவாடானை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பகல் நேரத்தில் கோயில் உண்டியலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.