ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா கட்டவிளாகம் ஊராட்சிக்குள்பட்ட கட்டவிளாகம், ருத்திரன் பட்டி, கல்லவழியேந்தல், இலுப்பக்குடி, கீழ்குடி கிராம விவசாயிகள் 2018-19 ஆண்டுக்கு விவசாய காப்பீடு செய்துள்ளனர். 2018-19ஆம் ஆண்டில் நோய்த்தாக்கம், மழைநீர் பற்றாக்குறையினால் விளைச்சல் இல்லாமல் விவசாயம் 100 விழுக்காடு இழப்பைச் சந்தித்தது.
இது தொடர்பாக கட்டவிளாகம் ஊராட்சிகுள்பட்ட கிராம விவசாயிகள் கூறுகையில், “ஊராட்சியின் சார்பில் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் ஊராட்சிக்குள்பட்ட சிலருக்கு மட்டும் 100 விழுக்காடு இழப்பீடு வழங்கியுள்ளனர்.
ஆனால், மற்றவர்களுக்கு 25 விழுக்காடு இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். அதனை உடனடியாக 100 விழுக்காடாக வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். இது குறித்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.
தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில், “ஒரு ஏக்கருக்கு 45 ஆயிரம்வரை செலவாகும்பட்சத்தில் இழப்பீட்டுத் தொகையாக 25 ஆயிரம் மட்டுமே தருகின்ற நிலை இருந்தது. அதனை உயர்த்தி 30,000 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில் எங்களது கிராமத்திற்கு மட்டும் 16 ஆயிரம் ரூபாயாக அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. மேலும், முறையாக காப்பீட்டுத் தொகை வழங்காவிட்டால் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்போம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காப்பீட்டுத்தொகை வழங்கவில்லை என்று கூறி கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மூளையில் அறுவை சிகிச்சை செய்தபோது பியானோ வாசித்த சிறுமி!