ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கடற்கரையில் நேற்று (மே.29) காலை மணலில் மனித எலும்புக்கூடுகள் கிடப்பதாக, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்குத் தடயவியல் துறை உதவி இயக்குநர் வினிதா தலைமையிலான குழுவினருடன் காவல்துறையினர் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது மனித எலும்புகள் மண்ணிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. எலும்புக்கூட்டின் மண்டையோடு, இடுப்பு, கால், மூட்டு, கை ஆகியவற்றின் எலும்புகளை அலுவலர்கள் சேகரித்தனர். கைப்பற்றப்பட்ட எலும்புகள் சுமார் 20 வருடங்களுக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது.
அதேபோன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் சுடுகாடு செயல்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. யாஸ் புயல் கரையைக் கடக்கும்போது வீசிய சூறைக்காற்று காரணமாக, தற்போது எலும்புக்கூடுகள் வெளியே தெரிந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், வாலிநோக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடற்கரை பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உணவுக்கூடம் அமைத்து மக்களின் பசிபோக்கும் சத்தீஸ்கர் காவல் துறை!