ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கானப் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடந்து வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் புனித ஆந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடலாடி வட்டார பள்ளிகளில் பணிபுரியும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
கடலாடி வட்டாரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். நேற்று (ஜன.27) காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த கலந்தாய்வு இரவு 8 மணிவரை நடக்கவில்லை.
இதனால் ஆசிரியர்கள் அலைக்கழிப்புக்கு ஆளானார்கள். இரவு 8 மணிக்கு மேல் கலந்தாய்வு கிடையாது என்று அறிவித்ததால் காலையில் இருந்து பணியிட மாறுதல் கிடைக்கும் என்று காத்திருந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஆத்திரத்தின் உச்சமடைந்த ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெறும் வளாகத்தை விட்டு வெளியேறாமல் இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். மேலும், கல்வி அலுவலர்களையும் அங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்து சிறைபிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் என்ற பெயரில் அவர்களை விடிய விடிய அடைத்து வைத்து கவுன்சிலிங் ஏதும் நடத்தாமல் அவர்களை அலைக்கழித்தது அவர்களுக்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பெண் ஆசிரியைகளும் இரவு நேரம் பூட்டிய அறைக்குள் இருந்த சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.