தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் இராமநாதசாமி கோயிலில் வழிபடுவதற்காக ராமேஸ்வரம் வருவது வழக்கம். ஆனால் கரோனா கட்டுப்பாடு காரணமாக ரயில்கள் இயக்கப்படாத நிலையில் நேற்று (பிப். 09) மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தென்னக ரயில்வேயிடம் அம்மாவாசை நாளில் பக்தர்கள் கொண்டாடும் விதமாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
அதனடிப்படையில், மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வண்டி எண் 06091 மதுரை - ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து இன்று(பிப். 10) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும்.
மற்றொரு சிறப்பு ரயில் வண்டி எண் 06097 மதுரை - ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து நாளை (பிப். 11) அன்று காலை 06.45 மணிக்கு புறப்பட்டு காலை 10.00 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06092 ராமேஸ்வரம் - மதுரை விரைவு சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து நாளை (பிப். 11) காலை 10.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மற்றொரு சிறப்பு ரயிலான வண்டி எண் 06098 ராமேஸ்வரம் - மதுரை விரைவு சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து நாளை (பிப். 11) மாலை 04.30 மணிக்கு புறப்பட்டு இரவு 07.30 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் கீழ் மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை-கெவாடியா இடையே சிறப்பு ரயில் சேவை தொடக்கம்!