ராமநாதபுரம்: கரோனா தொற்றின் இரண்டாம் அலை ராமநாதபுரத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. மாவட்டத்தில் நாளொன்றுக்கு 300க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று (மே.16) மட்டும் 399 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி அரசு மருத்துவமனை, தனிமைப்படுத்துதல் மையம், வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் தொற்று பாதிக்கப்பட்டு, 2,047 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கீழக்கரை, மண்டபம், ராமநாதபுரம் நகர் பகுதியில் நோய்களின் தாக்கம் வேகமாகப் பரவுகிறது. இதனால் அதிக அளவு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 பேர் வரை உயிரிழக்கும் சோகமும் நிகழ்கிறது.
இந்தநிலையில், கீழக்கரை பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கரோனா தொற்றால் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இன்று(மே.16) கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் காவல்துறையினர் தெருத்தெருவாக சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அநாவசியமாக வெளியில் சுற்றுவோரை எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். மக்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்த உதவும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சாலையில் கரோனா சடலம்: பொய்யான செய்தியை பதிவிட்ட நபருக்கு போலீஸ் வலை!