ராமநாதபுரம் மாவட்டம் மீன்வளத் துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பாக மீன்வளத்துறைக்கென தனியாக ரோந்துப் படகு இல்லை என்பதை கண்டித்து கடல் தொழிலாளர் சங்கம் ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மற்றும் சிறுதொழில் மீனவ கிராம மக்கள் இணைந்து கஞ்சித் தொட்டித் இறக்கும் போராட்டம் நடத்துவதாக இருந்தது.
காவல் துறையினர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து அரிசி மூட்டைகளுடன் மீன்வளத்துறை அலுவலகம் முன்பாக திருவோடு ஏந்தி நிதி வசூல் செய்து அதனை மீன்வளத்துறையிடம் ரோந்து படகு வாங்க நிதி உதவி வழங்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கடல் தொழிலாளர் சங்க சிஐடியு மீனவ சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கூறியதாவது, “மீன்வளத்துறையிடம் ரோந்துப் படகு இல்லாத காரணத்தால் மீனவர்களின் உயிர் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல்மீன் ஒழுங்குமுறைச் சட்டத்தை முறையாக மீன்வளத்துறை அமல்படுத்தாததால் சட்டவிரோத இரட்டைமடி, சுருக்குமடி மீன்பிடி தொடர்கிறது. இதற்கு மீன்வளத்துறை துணை போகிறது.
இதனை உடனடியாக கண்காணித்து உடந்தையாக இருக்கும் அலுவலர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். கடலோர பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தடை செய்ய மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இன்று திருவோடு ஏந்தி நிதி திரட்டி ரோந்து படகு வாங்க மீன்வளத் துறைக்கு நிதி கொடுக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறோம்” என்றார்.