மனைவியுடன் தகராறு - குழந்தையை எரித்துக் கொலை செய்த தந்தை கைது - Father arrested
ராமநாதபுரம்: மண்டபம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக ஒன்றரை வயது குழந்தையை தந்தையே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை பகுதியை சேர்ந்த மீனவர் முனியசாமி (26). இவருக்கும் அக்காள் மடம் காலனியைச் சேர்ந்த மரியா அவிஸ்டாவிற்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அபினேஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி மரியா அவிஸ்டாவின் தங்கை திருமணம் அக்காள் மடத்தில் நடந்தது. இத்திருமணத்திற்கு சென்ற இடத்தில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது குடிபோதையில் இருந்த முனியசாமி, குழந்தையை தன்னிடம் தருமாறு மரியா அவிஸ்டாவிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். குழந்தையை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மரியா அவிஸ்டாவை முனியசாமி தாக்கிவிட்டு, அவரிடம் இருந்து குழந்தையை பறித்துக்கொண்டு ஆட்டோவில் ஊருக்கு சென்றுள்ளார்.
அதன் பிறகு குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு அவர் வீடு திரும்பியுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 29) காலை முனியசாமி, புதுவலசை தாவு காடு பகுதியில் உள்ள அவரது தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். அவருடன் குழந்தை இல்லாதது குறித்து, மரிய அவிஸ்டாவிற்கு முனியசாமி தங்கை செல்போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவிஷ்டா குழந்தை குறித்து கேட்ட போது, ஒரு இடத்தில் இருப்பதாக முனியசாமி கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த மரியா இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். பின்னர் காவல் துறையினரின் விசாரணையில் குழந்தையை முனியசாமி எரித்துக் கொன்றது தெரிந்தது.
பின்னர் எரிந்து கரிக்கட்டையான குழந்தையின் உடலை மண்டபம் காவல் துறையினர் மீட்டு முனியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.