ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அழகர்சாமி (55). இவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக தினமும் அருகில் உள்ள தலைக்கால் கிராமத்திற்கு கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
அந்தவகையில் இன்று (நவ.07) தனது ஆடுகளை கிராமத்தின் அருகே உள்ள ஊரணி கரையில் மேய்த்துக் கொண்டிருந்தார். அங்கு தாழ்வாக கிடந்த மின் கம்பிகளை கையால் தொட்டு தூக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அதிலிருந்து மின்சாரம் தாக்கிய விவசாயி அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏற்கனவே தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை அகற்றக்கோரி, மின் வாரியத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும் தொடர்ந்து இதுபோன்று உயிர்பலி ஏற்படாமலிருக்க மின்வாரியம் துரித நடவடிக்கை எடுத்து கிராம பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் வயர்களைச் சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் 35 செ.மீ. மழை