ராமநாதபுரம் வட்டாரத்தில் கடந்த ஆண்டு கூட்டுப்பண்ணையம் திட்டத்தின்கீழ் தலா 100 உழவர்களைக் கொண்டு புத்தேந்தல், எருமைப்பட்டி, புல்லங்குடி ஆகிய கிராமங்களில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பாகச் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் கொள்முதல் செய்திட ஐந்து லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
அதன்படி, இயந்திரத்தின் முழு விலையில் மானியத் தொகையை கழித்துக்கொண்டு மீதித் தொகை பங்குத்தொகையாக சம்மந்தப்பட்ட குழுக்களால் செலுத்தப்பட்டு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் இயந்திரங்களை குழுவிலுள்ள உழவர்கள் குறைந்த வாடகை செலுத்தி பயன்படுத்தி குழுவின் வருமானத்தைப் பெருக்குகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் வட்டாரத்தில் கூட்டுப்பண்ணையம் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட புத்தேந்தல், எருமைப்பட்டி உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மானியத்தில் டிராக்டர்களை ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் டாம் பி. சைலஸ் வழங்கினார்.
இதில் பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குநர் சேக் அப்துல்லா, வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, வேளாண்மை உதவி இயக்குநர் செல்வம், ராமநாதபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், வேளாண்மை அலுவலர் கலைவாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.