இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த ஜெய்லாணி, அவரது மனைவி சித்தி ரொகானா, ரமலன் பின் இபுராகீம், அவரது மனைவி அமன் ஜகாரியா, முகம்மது நஷீ்ர் இபுராகீம், அவரது மனைவி ஹமரியா, மரியோனா, அவரது மனைவி சுமிஷினி ஆகியோர் மார்ச் 24ஆம் தேதி ராமநாதபுரம் பாரதிநகர் பள்ளிவாசலுக்கு வந்தபோது கேணிக்கரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சுற்றுலா விசாவில் வந்து ஊரடங்கை மீறி, மத பரப்புரையில் ஈடுபட்டதாக, இந்தோனேஷியர்கள் 8 பேரையும், அவர்களுக்கு உதவியதாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்த மூமுன் அலி (47) என்பவரையும் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி கேணிக்கரை காவல்துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்த மூமுன் அலியை காவலில் எடுத்து விசாரிக்க கேணிக்கரை காவல்துறையினர் ராமநாதபுரம் 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனு மீதான விசாரணை நேற்று (மே 15) நடைபெற்றது. அதற்காக சென்னை புழல் சிறையிலிருந்து மூமுன் அலியை காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வந்து ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க காவல்துறையினர் தரப்பில் கோரப்பட்டது.
ஆனால், அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தவும், மீண்டும் சனிக்கிழமை மாலையில் ஆஜர்படுத்தவும் நீதித்துறை நடுவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் அவரை விசாரணைக்கு கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க... மத பரப்புரைக்கு வந்த இந்தோனேசியர்கள் மீது வழக்கு