பெட்ரோல், டீசல் விலை கடந்த 7ஆம் தேதியிலிருந்து ஏறுமுகமாகவே உள்ளது. இதனால், அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால், இதைப்பற்றி மத்தியில் ஆளும் பாஜக அரசு சிறிதேனும் கவலை கொள்வதாக தெரியவில்லை என எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுவரை, பெட்ரோல் லிட்டருக்கு 9.17 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 11.14 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.
உலக நாடுகளே லாக்டவுனால் முடங்கி கிடக்கிறது. இதனால், சர்வதேச சந்தைகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கச்சாய் எண்ணெய் விலையும் சரிந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நாளுக்கு நாள் உயர்ந்து செல்வது நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக நாடு முழுவதும் இன்று போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ராமநாதபுரத்தில் மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில் அரண்மனை அருகேயுள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை குறைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காங்கிரஸ் ஆட்சியின்போது, பெட்ரோல் பீப்பாய் விலை 120 டாலராக இருந்தது. தற்போது 30 டாலராக இருந்து வருவதாகவும், கலால் வரி 60 ரூபாய்வரை அரசு நிர்ணயம் செய்து மக்கள் மீது சுமையை செலுத்துவது நியாயமற்றது என தெரிவித்தனர். மேலும், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கண்டித்து நான்கு சக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: 'கரோனா மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீசியன்களுக்கு தகுதியுள்ளது' - தமிழ்நாடு அரசு