ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் , மாதிரி தேர்வுகள் மற்றும் மாதிரி நேர்காணல்கள் சிறந்த வல்லுநர்கள் கொண்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசின் பல்வேறு துறைகளில் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் அறிவிப்பு செய்யப்பட்டு நடைபெற்று சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்விற்கு தகுதி பெற்றவர்களுக்கான மாதிரி நேர்காணல் கடந்த வருடம் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இரண்டு கட்டங்களாக துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.
இம்மாதிரி நேர்காணலில் 15 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இவர்களில் 12 பேர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட்ட நேர்காணல் தேர்வில் தேர்ச்சி பெற்று சார்பு ஆய்வாளர் பணிநியமனம் பெற்றுள்ளனர். இந்த இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் சந்திரகலாகவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள் மதுக்குமார், அருண்நேரு ஆகியோர் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவத் துறையில் பணியாற்றிட இலவச பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம்!