ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் மக்களை சந்தித்த ஆட்சியர் வீரராகவ ராவ், ஆய்வு மேற்கொண்டார். அப்போது ராமநாதபுரம் அருகேயுள்ள ஆர். காவனூர், தெற்கு தரவை ஊராட்சி அம்மன் கோயில், வைரவன் கோயில் ஆகிய பகுதிகளில் மக்களுக்காக வழங்கப்பட்ட குடிநீர் குழாய், கிணறுகளை ஆய்வு செய்தார்.
ஆர். காவனூர் கிராமத்தில் ஆய்வை முடித்துவிட்டு அருகே இருந்த மேல்நிலைப்பள்ளியின் பழைய கட்டடத்தை ஆய்வு செய்தார். அதன்பின், அதை இடிக்க ஏற்பாடு செய்யுமாறு பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய ஆட்சியர், அவர்களுக்கு என்ன விளையாட்டு பிடிக்கும் என்பது போன்ற கேள்விகளை எழுப்பினார். மாணவர்களும் ஆட்சியரிடம் செஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டுகள் பிடிக்கும் என்று கூறினார்கள்.
இதையடுத்து, சதுரங்க விளையாட்டை ஜீவா எனும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனும், ஆட்சியரும் விளையாடினர். ஜீவா, ஆட்சியருக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் சிறப்பாக ஆடினார். எனினும் சதுரங்க விளையாட்டில் ஆட்சியர் வெற்றி பெற்றார். அதன்பிறகு மாணவருக்கு தனது பாராட்டை தெரிவித்தார். இதேபோல அனைத்து மாணவர்களும் அறிவுக்கு வேலை கொடுக்கும் செஸ், கேரம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.