ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் உள்ள நோயாளிகளை மருத்துவர்கள் முறையாக கவனிப்பதில்லை எனத் தொடர்ந்து புகார்கள் எழுப்பட்டன.
இதனையடுத்து வார்டு முழுவதும் 24 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்க முடியும்.
இந்த நிலையில், இன்று (ஜூன் 5) ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் நேரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு சென்று, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ள கரோனா வார்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா மூலமாக அங்கு நடைபெறும் நிகழ்வுகளை ஆய்வு செய்தனர்.
மேலும், நோயாளிகளிடம், ஆட்சியர் பேசும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நோயாளிகளிடம் உரையாடிய ஆட்சியர் அங்குள்ள நிலவரங்களை கேட்டறிந்தார். அப்போது, உணவின் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், சுகாதாரப் பணியாளர்கள் மூலம் தூய்மை பணி முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர்.
மருத்துவர்களை நான்கு பகுதியாக பிரித்து, நோயாளிகளை நேரில் பார்த்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆலிவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கிய எஸ்.பி.வேலுமணி