ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் சார்பில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான வங்கிகள் கலந்துகொண்டன. இதன் முதல்நாள் முடிவில் 700 பயனாளிகளுக்கு ரூ. 300 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக விழாவில் பேசிய ஆட்சியர் "பிரதமர் உத்தரவின்படி இந்திய அளவில் சிறப்புக் கவனம் செலுத்தக்கூடிய மாவட்டங்களாக 117 தேர்ந்தெடுக்கப்பட்டது, இதில் இராமநாதபுரமும் ஒன்றாகும். இதன் அடிப்படையில் கல்வி வளர்ச்சி, வேளாண்மை, நீர்ப்பாசனம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுத்துறை, தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை வங்கிகள் சார்பாக ஏறத்தாழ 25 வங்கிகள் பங்கேற்ற மாபெரும் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கடன் வழங்கப்படுகின்றன.
மத்திய, மாநில அரசுகள் சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல சிறு குறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் முத்ரா கடன் உதவி திட்டங்களும் உள்ளன. நடப்பாண்டில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 350 கோடி கடன் உதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் 2 லட்சம் பனை மரங்கள் உள்ளன. பனை தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை ரூ. 50 லட்சம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்".
இந்த விழாவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் கேதார்நாத், தூத்துக்குடி முதன்மை மண்டல மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முறையாக பந்தல் அமைக்காததாலும் மக்கள் அதிக அளவில் திரண்டதாலும் மக்கள் கூட்ட நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையும் படிக்கலாமே: ஏரோநாட்டிக்கல் படிப்புக்கு கல்விக் கடன் கிடையாது... ஆதிதிராவிட நலத்துறை செயலருக்கு நோட்டீஸ்!