தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து இன்று (டிச. 01) காலை 5:30 மணி நிலவரப்படி இலங்கையின் திருகோணமலைக்கு 530 கிமீ கிழக்கு-தென்கிழக்கிலும் கன்னியாகுமாரிக்கு 930 கிமீ கிழக்கு-தென்கிழக்கிலும் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது. இதற்குப் புரெவி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் புயல் கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் தற்போது அது மூன்றாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை தடைவிதித்துள்ளது.
இதனால் சுமார் ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட படகுகள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகப் பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: புயல் குறித்து தகவல் தெரியாமல் ஆழ்கடலில் தவிக்கும் 1,500 மீனவர்கள்!