வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில், குறைந்த காற்றழுத்த நிலை உருவாகி அடுத்தடுத்த நாள்களில் வலுவடைந்து புயலாக மாறி இலங்கையை நோக்கி நகர்ந்துவருகிறது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தற்போது உருவாகியுள்ள புரெவி புயல் பாம்பனுக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் மையம்கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று தற்காலிக முகாம்களில் தங்கவைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
முகாம்களில் பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், ஜெனரேட்டர்கள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறை, தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், புயல், கனமழை அறிவிப்பு தொடர்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வுமேற்கொள்ளவுள்ளார்.
இதையும் படிங்க: ’அழகிரி புயலால் திமுகவுக்கு பாதிப்பு’