கோவிட்-19 வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. எனவே கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை ஒன்பது பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஊரடங்கிற்கு அம்மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.
இதனையொட்டி சுற்றுலாத்தலங்களான, ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் தனுஷ்கோடி, மூக்கையூர், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகள் முடக்கப்பட்டன. 5000 நாட்டுப் படகுகள் மற்றும் 1,500 விசைப் படகுகளின் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினர் காலவரையற்ற தடை விதித்துள்ளனர். இதன் மூலம் மக்கள் கூடுவதை தவிர்த்தால் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இயலும் என மீன்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கால் கொல்கத்தாவுக்கு நடந்த நன்மை