ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் இந்த காலங்களில் மீனவர்கள் தங்களுடைய படகுகளில் பழுது நீக்கும் வேலையை ஈடுபட்டு வருவர்.
இந்நிலையில் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து, தென்கடல் பகுதியிலிருந்து ஏராளமான விசைப்படகுகள் கடந்து சென்றன. இவை பழுது நீக்கும் பராமரிப்பு பணிக்காகவும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காவும் மண்டபம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அதில், மும்பையிலிருந்து காக்கிநாடா துறைமுகத்திற்கு செல்லும் இரண்டு இழுவை கப்பல்களும் ரயில் தூக்குப் பாலத்தை கடந்து சென்றன. பாலம் திறக்கப்பட்டதும் போட்டி போட்டு அவசரமாக சென்ற இரண்டு விசைப்படகுகளின் கேன்ட்ரி பகுதி மோதியபடி கடந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.