கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வேப்பூர் பகுதியில் ஜாபர் என்பவருக்குச் சொந்தமான ரப்பா என்ற மீன்பிடி விசைப்படகில், ராமநாதபுரம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்களும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 14 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கப்பல் மோதி கடலுக்குள் மூழ்கிய படகு
இன்று (ஏப். 14) கர்நாடக மாநிலம், மங்களூர் ஆழ்கடல் பகுதியில் சுமார் 60 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஐபிஎல் லீ ஹாவேறே என்ற சிங்கப்பூரைச் சார்ந்த சரக்குக் கப்பல் மோதியதில் படகு மூழ்கியது.
இதில், ராமநாதபுரத்தைச் சார்ந்த வேல்முருகன் என்ற மீனவரையும், மேற்கு வங்கத்தைச் சார்ந்த சுனில் தாஸ் என்ற மீனவரையும் விபத்து ஏற்படுத்திய ஐபிஎல் லீ ஹவரே என்ற கப்பல் ஊழியர்கள் உயிரோடு மீட்டுள்ளனர்.
![கப்பல் ஊழியர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rmd-02-boat-accident-three-ramanathapuram-fishermen-missing-pic-script-tn10040_14042021141502_1404f_1618389902_703.jpg)
மீனவர்களை தேடும் பணியில் இந்தியக் கடலோர காவல் படை
மேலும், இறந்த மூன்று மீனவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான ஒன்பது மீனவர்களை தேடும் பணியில் இந்தியக் கடலோர காவல் படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்தியக் கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஐஎன்ஜிஎஸ் ராஜதுரை என்ற கப்பல் விபத்து ஏற்படுத்திய கப்பலை, ஆழ்கடலில் சிறைப்பிடித்துள்ளது.
தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பாதர் சர்ச்சில் வைத்த கோரிக்கைகள்
"மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும். மேலும், ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகளுக்கும், மீனவர்களுக்கும் இதுபோன்று கப்பல்களில் ஏற்படும் விபத்துகளிலிலிருந்து, மீனவர்களுக்கு கடலில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்" என தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பாதர் சர்ச்சில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேதமாணிக்கம், பழனி, பாலமுருகன் ஆகிய மூன்று மீனவர்கள் நிலை என்ன என்பது தெரியாமல் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதையும் படிங்க: 'பயணிகள் எண்ணிக்கை குறைவால் அரசுப் பேருந்துகள் தற்காலிக நிறுத்தம்!'