கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மே14ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறியிருந்தார். இதற்கு பாஜக மற்றும் இந்துகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாநிலத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளன. இதைதொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பெரும்பான்மையான இந்துக்களை புண்படுத்தும் நோக்கத்தில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். தான் பேசிய கருத்தை நியாயப்படுத்தி வருவதோடு, என்மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் தமிழ்நாட்டில் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.
அப்படி என்றால் யாரோ அவருடைய பின்புலத்தில் செயல்படுகிறார்கள் என்பது தெரிகிறது. இதனை தடுக்கும் வகையில் கமல் மீது வழக்குப்பதிவு செய்து அவரது பின்புலத்தில் யார் இருக்கிறார் என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும், என்றார்.