ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் பன்னீர் செல்வத்தை ஆதரித்து சரத்குமார் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ஐம்பது கோடி, நூறு கோடி இருந்தால்தான் தேர்தலில் நிற்கவேண்டும் என்பதை மாற்ற வேண்டும். பொது சேவை, மக்கள் சேவையில் ஈடுபட்டவர்கள் சட்டப்பேரவைக்கு சென்றால் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்ற நோக்கத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட எளியோருக்கும் வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலிலும் மக்கள் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பார்களா என்று தான் கேட்கிறார்கள். ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தார்கள்? சாலை போட்டார்களா? மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தார்களா? என யாரும் கேட்பதில்லை. அரசியல்வாதிகளும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஓட்டுக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் கொடுக்கலாமா என்றுதான் நினைப்பார்கள்.
ஒரு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் 75 கோடி ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக இருக்கிறார். 75 கோடி இருந்தால்தான் சட்டப்பேரவை உறுப்பினராக முடியும் என்றால், மக்களுக்காக சேவை செய்கின்ற சாதாரணக் குடிமகன் எப்படி சட்டப்பேரவை உறுப்பினராக முடியும்? எளியவர்க்கு வாய்ப்பு, பணம் இல்லா அரசியல் என்ற தத்துவத்தின்படி வாக்களித்தால் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிவிடலாம்.
நான் பிஎஸ்சி கணிதம் படித்திருக்கிறேன். முதன்முதலில் சைக்கிளில் சென்று பேப்பர் போட்டிருக்கேன். சைக்கிள் பிட்டராக வேலை செய்திருக்கிறேன். வானத்தில் இருந்து குதித்து நட்சத்திரம் ஆகவில்லை, உழைப்பினால் உயர்ந்தவன்தான் சரத்குமார். புரட்சித்தலைவர் போல வரவேண்டும் என்று எண்ணி உங்களுடைய ஆதரவால் உயர்ந்துள்ளேன். கிராமப்புறங்களில் பாதாள சாக்கடை வசதி இல்லை. எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. ஐம்பதாண்டு காலமாக மாறி, மாறி ஆட்சிக்கு வந்தவர்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை.
முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் 2ஜியில் உள்ளே சென்று வந்தவர். அவர் நமது மாநில முதலமைச்சரின் பிறப்பைப் பற்றி இழிவாகப் பேசி இருக்கிறார். இது அவர்களுக்கு அரசியலாகத் தெரிகிறது. மக்களைப் பற்றி சிந்திப்பது கிடையாது. மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவது கிடையாது. ஓட்டு வங்கி அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் தருவதாக சொல்லி இருக்கிறார்கள். கரோனா காலத்தில் நான் துணி துவைத்திருக்கிறேன். அதனால் சொல்கிறேன் வாஷிங் மெஷின் பயன்படுத்துவதற்கு சோப்பு தருவார்களா? தடையில்லாத மின்சாரம், தண்ணீர் கிடைக்குமா? எனக் கேளுங்கள். காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கையை பாராட்டுகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: அறந்தாங்கியில் சிலம்பாட்டம் ஆடிய காங்கிரஸ் வேட்பாளர்