ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர்கள் நயினார் முகமது - ஜெசிமா தம்பதியர், இவர்களது மகன் முகமது அமீர்(13), 9ஆம் வகுப்பு படித்து வந்தார். முகமதுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முதுகில் வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது முதுகு தண்டுவடப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அதையடுத்து சிறுவன் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென வலி அதிகரிக்க, ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் எப்படி சிறுவனை கொண்டுசெல்வது என தொரியாமல் தவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்திற்கு தகவல் கிடைக்க, சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டனர். அதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் இதுகுறித்து தகவலளித்து சிறுவனை அழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகமது இஜாஸ் சிறுவனை ஏற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு புறப்பட்டார். இரவு நேரமாக இருந்ததால் ஆம்புலன்ஸுக்கு முன்பாக மிகவும் வேகமாக செல்ல வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு கொடுத்துக் கொண்டு சென்றனர்.
மேலும் நாகப்பட்டினம், காரைக்கால், பரங்கிப்பேட்டை ஆகிய ஊர்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிவிடாமல் உரிய நேரத்தில் கொண்டு செல்வதற்காக முன்கூட்டியே வழிநெடுகிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவலளித்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். தற்போது அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் எந்த பாதிப்புமின்றி, சிறுவனின் சிகிச்சைக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகமது இஜாஸ், போக்குவரத்தை சரிசெய்து உதவிய சமூக சேவகர்களுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமுமுகவின் இந்த முயற்சியால் சிறுவனின் உயிர் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது.