இராமநாதபுரம் நகர் முழுவதும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அனைத்து வார்டு செயலாளர்களும் தங்கள் பகுதிகளில் கட்சி கொடியேற்றினர். அதன்படி, கேணிக்கரை பகுதியில் 9 ஆவது வார்டு செயலாளர் கொடி ஏற்றியபோது, அங்கு நகர செயலாளரும் வந்ததால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று முன்னாள் கவுன்சிலரும் 9 ஆவது வார்டு செயலாளருமான வீரபாண்டியனை (60), அரிவாளால் சிலர் தலையில் வெட்டியுள்ளனர்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து வீரபாண்டியனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராமநாதபுரத்தில் அதிமுகவினர் 3 பிரிவுகளாக பிரிந்து, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது அது ஒருபடி மேலே சென்று அரிவாளால் வெட்டிக்கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் அதிமுக தொண்டர்களே சலித்துக் கொள்கின்றனர்.
சிகிச்சையில் இருக்கும் வீரபாண்டியன் கொடுத்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவையாறு அருகே லாரி டிரைவர் பீர் பாட்டிலால் அடித்து கொலை