அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவர்களை ஆதரித்துப் பரப்புரை செய்து, வாக்கு சேகரிக்க உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று (மார்ச். 31) தமிழ்நாடு வந்தார்.
பாஜக, அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட உ.பி., முதலமைச்சர்
நேற்று காலையில் கோவையில் பரப்புரை மேற்கொண்ட அவர், மதியம் விருதுநகரில் நடந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரை முடித்தபிறகு, தனி ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் வந்த, யோகி ஆதித்யநாத்துக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். பின்னர், கார் மூலம் யோகி ஆதித்யநாத் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றார்.
ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்கப்பட்டது. கோயிலில் நடைபெற்ற ருத்ர பாராயண ஜெப பூஜையில் கலந்துகொண்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார்.
நேற்று (மார்ச். 31) காலை யோகி ஆதித்யநாத் தனுஷ்கோடிக்குச் சென்று, அங்கு புயலால் சிதிலமடைந்த கட்டடங்களையும் அரிச்சல்முனை கடற்கரையையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து பரப்புரைக்கு கொச்சிக்குச் சென்றார்...
தொடர்ந்து பாம்பன் குந்துகால் பகுதியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் கார் மூலம் அவர் மண்டபம் முகாமிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு புறப்பட்டு வந்து, அங்கிருந்து பரப்புரைக்காக கொச்சிக்குச் சென்றார்.
இதையும் படிங்க: 'இன்று மதுரை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி- நாளை அதிமுக, பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டம்!'