தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர், நேற்றுமுன்தினம் பரமக்குடியில் நடைபெற்ற
தேசிய கைத்தறி விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக பேட்டியளித்தார். இதைத் தொடர்ந்து, நேற்றிரவே தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் விடுவிக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியானது. இது அதிமுகவினர் மத்தியிலும், மற்ற அமைச்சர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை வரவேற்கும் விதமாக அதிமுகவினர் ராமநாதபுரம் பேருந்து நிலையம், ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்த நிகழ்வின் மூலம் அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது சொந்தக்கட்சியினரே அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர் என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.