ராமநாதபுரம்: கடந்த சில நாட்களாகவே தொண்டர்களுடன் தொலைபேசி வாயிலாக சசிகலா பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, தான் தீவிர அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்த சசிகலா, தொடர்ந்து தொண்டர்களுடன் பேசிவருவதால், அரசியலில் அவர் ரீ என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சசிகலாவுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுகவினர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்நிலையில் ராமநாதபுரம் அதிமுக ஒன்றிய மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் சசிகலாவுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
குறிப்பாக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், பாரதி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் “தியாகத் தலைவி சசிகலாவின் ஒற்றை தலைமையை ஏற்று களப்பணி ஆற்றுவோம்; சசிகலா தலைமையில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைப்போம்” என்று எழுதப்பட்டுள்ளது.