திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா சில தினங்களுக்கு முன்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசினார் என்று அதிமுகவினர் நேற்று (டிசம்பர் 7) விருதுநகரில் திமுக தலைவர் ஸ்டாலினின் உருவ பொம்மையை எரித்தனர்.
இதனைத் தொடர்ந்து விருதுநகரில் அதிமுக திமுக கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர். இதனை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இந்நிலையில், இன்று ராமநாதபுரம் அரண்மனை ஆ. ராசாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு அதிமுகவினர் ராசாவின் உருவபொம்மையை எரித்தனர். அங்கு பணியிலிருந்த காவல் துறையினர் அதனை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அங்கு வந்த திமுகவினர் அதிமுகவினரை நோக்கி செருப்பு, காய்கறி, கற்களை வீச தாக்கினர். இருவரும் கடுமையான சொற்களால் மாறி மாறி வசைபாடிக் கொண்டு தாக்க முற்பட்டனர்.
அங்கு பணியிலிருந்த ராமநாதபுரம் டிஎஸ்பி வெள்ளத்துரை இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வன்முறை ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டார். இதற்கிடையில் அப்பகுதிக்கு அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த பகுதிகளை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.