ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி விழாவும், 57ஆவது குருபூஜை விழாவும் குறிப்பிட்ட சமூக மக்களால் கொண்டாடப்படுகிறது. குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இதனையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கூடுதல் டிஜிபி (சட்டம், ஒழுங்கு) ஜெயந்த் முரளி, பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடம், காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஸ் குமார் மீனா, காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்ட காவல் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பின் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி செய்தியாளர்களிடம் கூறுகையில், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பத்தாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பசும்பொன் கிராமத்தில் ஆள் இல்லாத விமானங்கள் மூலம் மக்கள் கூட்டம் கண்காணிக்கப்படும்.
‘பேஸ் டிராக் மொபைல் ஆஃப்’ மூலம் ஏற்கனவே உள்ள குற்றவாளிகள் கூட்டத்திற்குள் வந்தால் உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.