ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ரூ.380 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டுமான பணிகள் 48 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் கட்டுமானப் பணிகளின் தரம் குறித்தும், பணியின் வேகம் குறித்தும் ஆய்வு நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை திட்ட இணைச் செயலர் நடராஜன் ஐஏஎஸ் தலைமையிலான குழுவினர் இன்று நேரில் வருகை தந்து மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு 2021-22 முதல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த, சுகாதாரத் துறை திட்ட இணை செயலர் நடராஜன், "கட்டுமான பணிகள் சீராக நடந்து வருகின்றன. இதுவரை 48 சதவீத பணிகள் நடந்துள்ளன. நடப்பாண்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது" என்றார்.