ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பிரிவு கோதண்டராமர் கோயில் பகுதியில் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷன் தலைமையிலான வனவர் தேவகுமார், வனக்காப்பாளர் தஜான்சன், வேட்டைத் தடுப்பு காவலர்களுடன் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, இரட்டைதாளை என்ற இடத்தில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டை, ஒரு பிளாஸ்டிக் வாளியை சந்தேகத்திற்கிடமான முறையில் வைத்திருந்ததை கண்டறிந்து சோதனை செய்தனர்.
அதில், அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ கடல் அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டன. அவற்றில் 20 கிலோ உயிருடன் இருந்தது. பின்னர் கடல் அட்டைகளை வனத்துறையினர் கைப்பற்றி, அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ராமேஸ்வரம் எம்.ஜி.எஸ் பகுதியைச் சேர்ந்த சக்தி வேல் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 2002 கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.