ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாகப் பலமுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் வந்தது. இதனடிப்படையில் ராமேஸ்வரம் அருகே மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் காவலர்கள் இன்று தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரி ஓட்டுநர் காவலர்களைக் கண்டதும் தனது வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். உடனே காவலர்கள் மினி லாரி ஓட்டுநரை மடக்கிப் பிடித்து மினி லாரியில் சோதனையிட்டபோது, அதில் 24 அட்டைப் பெட்டிகளில் 120 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மது பாட்டில்களையும், மினி லாரியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து மண்டபம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மினி லாரி ஓட்டுநர் ஆனந்தன் திருச்சியைச் சேர்ந்தவர் என்பதும் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தார் என்பதும் தெரியவந்து. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் அடுத்த 24 மணி நேரத்திற்கு யாரும் நுழைய முடியாது: ஏன் தெரியுமா?