ராமநாதபுரம்: பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகரன், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கடந்த ஒரு வாரமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் சுமார் 25,000 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் பயிரிடப்பட்டிருந்தது.
ஓரிரு நாட்களில் அருவடைக்கு தயாராக இருந்த நிலையில் திடீர் என பெய்த கன மழை காரணமாக பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்து ஏழை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மற்ற மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை விட பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஏழை எளிய விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் விதமாக முதலமைச்சர், விவசாயிகளின் இழப்பீடுகளுக்கு நிவாரணம் வழங்கி உதவுமாறும், பாதிக்கப்பட்ட பகுதிக்கு 100 விழுக்காடு காப்பீட்டுத் தொகை கிடைத்திட உதவுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டாம்; ஆந்திர அரசுக்கு பொதுப்பணி துறை அலுவலர்கள் கோரிக்கை