ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவிற்குட்பட்ட வாத்தியனேந்தல், கர்நயடான், பனையடியேந்தல், உள்ளிட்ட கிராமங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலைப் பார்த்து வருகின்றனர்.
தொடக்க காலங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கான ஊதியம் முறையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது சில காலங்களாக பணம் முறையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்ததற்கும் சரியான பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி செய்வதற்கான பணம் முறையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாததற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என மனு அளித்தனர்.