காவல் துறையினருக்கு தெரியாமல் பெண் உடல் எரிப்பு - 5 பேர் மீது வழக்கு - Crime news
புதுக்கோட்டை: திருமயம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை காவல் துறையினருக்கு தெரியாமல் எரித்த கணவன் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
![காவல் துறையினருக்கு தெரியாமல் பெண் உடல் எரிப்பு - 5 பேர் மீது வழக்கு உமா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:48:48:1598019528-tn-pdk-01-lady-sucide-img-scr-7204435-21082020194451-2108f-1598019291-736.jpg?imwidth=3840)
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டை சேர்ந்தவர் முருகப்பன். இவரது மகன் சிவாவிற்கும் (27), கண்ணணிப்பட்டி பகுதியை சேர்ந்த காடப்பன் மகள் உமா மகேஸ்வரிக்கும்(25) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குழந்தை இல்லாத விரக்தியால் உமா மகேஸ்வரி நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உடனே கணவன், மாமனார் உள்பட உறவினர்கள் உமா மகேஸ்வரியின் உடலை எரித்துள்ளனர்.
இதையடுத்து உமா மகேஸ்வரியின் தாயார் பாஞ்சாலி, திருமயம் காவல் நிலையத்தில் தன் மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஸ்டாலின் வழக்குப் பதிவு செய்து உமாவின் கணவன் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.