புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் எருக்குமணிப்பட்டியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி ஐஸ்வர்யா (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, இன்று (ஜூலை 22) அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, இலுப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக ஐஸ்வர்யா அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல பரிந்துரைத்தனர்.
பின்னர், இலுப்பூரில் இருந்து 108 ஆம்புலன்ஸில் ஐஸ்வர்யாவை அனுப்பிவைத்தனர். புதுக்கோட்டை நோக்கி ஆம்புலன்ஸ் சென்றபோது, முத்துடையான்பட்டி என்னும் இடத்தில் ஐஸ்வர்யா பிரசவ வலியால் துடித்தார். இதையடுத்து, ஐஸ்வர்யாவுக்கு ஆம்புலன்சிலேயே மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, பைலட் தேவா பாஸ்கரன் ஆகியோர் பிரசவம் பார்த்தனர். பின்னர் சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து தாய் ஐஸ்வர்யா, குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து மருத்துவ உதவியாளர்கள் கூறுகையில், பிரசவ சிகிச்சை மிகவும் சிக்கலானது. அதிக வலியால் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம் பார்க்க நேரிடுகிறது. இலுப்பூர் ஆம்புலன்ஸில் மட்டும் இந்த ஆண்டு 10க்கும் அதிகமான பிரசவ சிகிச்சை அளித்து தாய் சேயை காப்பாற்றியுள்ளோம் என்றார்.