நாட்டில் உள்ள பெரும் பிரச்னைகளில் ஒன்று குடிநீர் பிரச்னை. என்ன தான் நதிநீரை இணைத்தாலும், கடல் நீரை குடிநீராக்கினாலும் தண்ணீர் பிரச்னை மட்டும் தீர்ந்தபாடில்லை. ”நீரின்றி அமையாது உலகு” என்பார்கள். மனிதன் உயிர் வாழ மிகவும் முக்கியமானது தண்ணீர். மேலும் இது இல்லையென்றால் எந்தப் பணிகளும் நடக்காது.
புதுக்கோட்டை மாவட்ட நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளுக்கும் ஒரு நாளைக்கு 1,20,000 லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகராட்சிப் பகுதியில் 25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியும், 16 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை தொட்டியும் என 25க்கும் மேற்பட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் இருக்கின்றன. கூடுதலாக மாவட்டத்தில் 14 குடிநீர் தேக்கத் தொட்டிகள் உள்ளன. அனைத்துத் தொட்டிகளிலும் காவிரி நீர் பாசனத்தின் மூலம் குடிநீர் வரவழைக்கப்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் வழங்கப்படுகிறது.
இருப்பினும் தண்ணீர் பற்றாக்குறை ஆங்காங்கே இருந்து வருகிறது. காவிரி நீர்ப் பாசனம் வருவதற்கு முன்னால், மாவட்டத்திற்கு புதுக்குளம், அமையப்பட்டி, வல்லாதிரகோட்டை போன்றப் பகுதிகளில் இருந்து தண்ணீர் வரவழைக்கப்பட்டது. அப்போது குடிநீர் பிரச்னை அதிகளவில் ஏற்பட்டது. இதனால் போராட்டங்கள் பல நடந்தன.
காவிரி நீர்ப் பாசனம் ஒவ்வொரு வீட்டிற்கும் இணைக்கப்பட்ட பிறகு ஓரளவிற்கு குடிநீர்ப் பிரச்னை தீர்ந்து இருந்தாலும் கூட, நகராட்சி வழங்கும் தண்ணீர் ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்று நகரவாசிகள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட பிறகுதான் மினரல் வாட்டர் கலாசாரம் தொடங்கியது. பின்னர், இதற்கு மக்கள் அடிமையாகிவிட்டனர். மாவட்டத்தில் சில இடங்களில் தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவு தண்ணீர் வீணாகிறது. பலர் இயந்திரத்தைக் கொண்டு தண்ணீரை உறிஞ்சிவிடுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்தபோது, "முன்பெல்லாம் 10 நாட்களுக்கு ஒரு முறை, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை என தண்ணீர் வரும். ஆனால், தற்போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது. வருகின்ற தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால் சிலர் ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். அதனை வாங்கிக் கொள்வோம். வசதி இருப்பவர்களுக்கு எதுவும் சாத்தியம். ஆனால், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, எங்களைப் போன்றவர்களுக்கு இப்படி தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவது கடினம். ஆண்டு தோறும் தண்ணீர் வரி தவறாமல் கட்டி விடுகிறோம். அதற்கு ஏற்ற குடிநீர் வழங்க வேண்டும்" என்றனர்.
சமூக ஆர்வலர் நிவாஸ் தெரிவித்தபோது, "மத்திய அரசு 2024 ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை அமல்படுத்தி ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வோம் என அறிவித்து உறுதியளித்தது. ஆனால், இன்று வரையிலும் அப்படி எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. நகரமயமாதல் மக்கள் தொகைப் பெருக்கம் போன்றவை இருந்தாலும் கூட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வது நகராட்சியின் கடமை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குடிநீர் என்பது கேள்விக்குறியாக இருந்தது. தற்போது வரும் குடிநீர் சில சமயங்களில் சாக்கடை கலந்து வருகிறது அல்லது போதுமானதாக இல்லை. குடிநீர் பிரச்னை சம்பந்தமாக நிறைய போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். நகராட்சியால் நிரந்தரமாக ஒரு தீர்வை காண முடியவில்லை" என்றார்.
இப்பிரச்னை குறித்து நகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, "புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் குடிநீர் தேவையைத் தற்போது பூர்த்தி செய்து இருக்கிறோம். ஆங்காங்கே, நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து மொத்தமாக 94 லட்சம் லிட்டர் தண்ணீர் பிடித்தம் செய்து நகராட்சி முழுவதும் விநியோகம் செய்கிறோம். அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்திற்கு என கொள்ளிடம் ஆற்றுப் பாசனத்தின் மூலம் தண்ணீர் வரவழைப்பதற்காக 513 கோடி ரூபாய் ஒதுக்குவதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் அதை செயல்படுவார்" என்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கில் தலைதூக்கும் தண்ணீர் பிரச்னை!