புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலையைச் சேர்ந்த கருப்பையா - மலர் தம்பதியினரின் மகன் கார்த்திக் ராஜா. கடந்த ஆறு வருட காலங்களாக இசையின் மீது உள்ள ஆர்வத்தால் காதல், சோகம், குடும்பம் உள்ளிட்டப் பல்வேறு சூழ்நிலையைப் பற்றி பாடல் வரிகளை எழுதி வந்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு இவர் பாடிய ‘அம்மா பாடல்’ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. குடும்பச்சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தற்போது லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார், கார்த்திக் ராஜா.
லாரி ஓட்டி முடித்துவிட்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம், பாடல் வரிகள் ஏதாவது ஒன்றை எழுதிக்கொண்டே இருப்பாராம். அவரது அப்பா வயது மூப்பின் காரணமாக பணிக்குச் செல்ல முடியாத நிலையில், அம்மா மாற்றுத்திறனாளி ஆவார். இவரது தங்கை தற்போது எட்டாம் வகுப்பு படித்து வருகிறாராம்.
அவரது குடும்பத்தை வைத்துக்கொண்டு அம்மா பாடல் பாடும்போது அவரது தந்தை மற்றும் தாய் கண்ணீர் சிந்தும் வீடியோ நம்மையே கண்கலங்க செய்துள்ளது. இவரிடம் நிறைய பாடல் வரிகள் இருந்தாலும் அதை வெளி உலகத்திற்கு எடுத்துச்செல்ல வறுமை தடையாக இருந்து வருவதாக கார்த்திக் ராஜா வேதனையுடன் தெரிவிக்கின்றார்.
இதையும் படிங்க: இயக்குநர் வ.கௌதமனின் 'மாவீரா' படம் பூஜையுடன் தொடக்கம்