புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது சொந்த கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினார்.
இதில் 150 கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. அனைத்தும் குறைந்த செலவில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலும், அன்றாடத் தேவைகளை மையப்படுத்தியும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 55 அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். தொழில்நுட்பங்களை எவ்வாறு கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்தினார்கள். அதன் பயன்கள் என்ன என்பதை அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்தக் கண்காட்சியில் மின்சாரம் இல்லாமல் துணிதுவைப்பது, மாவு அரைப்பது, தண்ணீர் இறைப்பது, மின்சாரம் வரவைப்பது, உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணிகளைச் செய்வது, கடல் தண்ணீரில் மின்சாரம் வரவைப்பது, கழிவுநீரை நல்ல தண்ணீர் ஆக்குவது போன்ற எண்ணற்ற படைப்புகளை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
கண்காட்சி குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் கூறுகையில், ”தங்களது மேற்படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாகவும், இதைப் பார்க்கும்போது கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது” என தெரிவித்தனர்.
தொடர்ந்து கல்லூரியின் தாளாளர் கதிரேசன் பேசுகையில், ”இந்தக் கண்காட்சியின் நோக்கம் மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கவும், தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் இந்தக் கண்காட்சியை அமைத்தோம். எங்கள் மாணவர்கள் இனிவரும் காலங்களில் நிறைய கண்டுபிடிக்க உள்ளார்கள்" என்றார்.
இதையும் படிங்க:
'10 விழுக்காடு வளர்ச்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை' - அடித்துச் சொல்லுகிறார் டி.ஆர். பாலு