புதுக்கோட்டை: தனியார் திருமண மண்டபத்தில் 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் மாவட்ட அளவிலான சிறந்த சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள், நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நிறைவேற்றி உள்ளது. இதனை எதிர்த்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் மேல்முறையீடு செய்திருந்தனர்.
அவர்கள் தாங்களாகவே அந்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற்றுள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தொடர்ந்தால் அது சம்பந்தமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் நளினி உள்பட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வில், இலங்கை தமிழர்களான நான்கு பேர் திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாஸ்போர்ட் வந்ததும் அவர்கள் இலங்கைக்கு செல்லலாம். அங்கு அச்சுறுத்தல் இருந்தால் அவர்கள் போகாமலும் இருக்கலாம்" என கூறினார்.
இதையும் படிங்க: வேலைவாய்ப்பு... கைலாசா கூறுவது என்ன?