புதுக்கோட்டையில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான நல்லசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கள் இயக்க போராட்டம் நடைபெறும். கள் ஒரு போதைப் பொருள் என்று அரசியல் கட்சிகள் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா? நாங்கள் விவாதத்திற்கு தயார். கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் என்று அவர்கள் நிரூபித்து விட்டால், நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். கள் குறித்த புரிதல் தமிழ்நாட்டில் இல்லை. கள் என்பது உணவின் ஒரு பகுதி.
காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையற்ற இலவச திட்டங்களை நிறைவேற்றாமல், காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அந்த நிதியை பயன்படுத்த வேண்டும். தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து வரும் தலைமுறைகளுக்காக இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதைக் கிடப்பில் போட்டால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட வெற்றி பெற முடியாது.
16 ஆண்டுகளாக கள் இறக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளோம். எங்களுடைய போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆளும் அரசாங்கங்கள் செவி கொடுக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு 1ஆம் தேதி நடைபெறும் கள் இறக்கும் போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளன. கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் விவசாயிகளை ஏமாற்றி விட்டனர். மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். 2024 ஆம் ஆண்டு மிகப் பெரிய பருவநிலை மாற்றம் வரவுள்ளது. இதனால் விவசாயிகள் மட்டுமல்ல உலகமே பெரும் பாதிப்பிற்கு உள்ளாக போகிறது.
மழை பெய்ய வேண்டிய இடத்தில் மழை பெய்யாது. பெய்ய கூடாத இடத்தில் மழை பெய்யும். இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட போகிறது. இயற்கையை நாம் பகைத்துக் கொண்டோம் அதனுடைய வெளிப்பாடு தான் இது. தக்காளி, மஞ்சள், வெங்காயம் ஆகியவற்றின் விலை ஏற்றம் விலை வீழ்ச்சி ஆகியவற்றிற்கு காரணம் அரசாங்கங்கள் தான்.
சரியான திட்டமிடல் இல்லாதது, விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு கொடுக்காதது, எது தேவை எந்த காலத்தில் தேவை என்பதை விவசாயிகளுக்கு முறையாக அறிவிக்காதது தான் தக்காளி வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றத்திற்கான காரணம். வெங்காயம் விலை ஏற்றம் நான்கு மாநில ஆட்சியை மாற்றிக் காட்டியது. ஆனால் வெங்காய விலை வீழ்ச்சி ஒரு மாநிலத்திலும் இதுவரை ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை” என்றார்.
இதையும் படிங்க: Tomato Price Drop: மக்களுக்கு ஒரு குட் நியூஸ் - சென்னையில் தக்காளியின் விலை குறைந்தது!