புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட திமுகவின் சார்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மொழிப்போர் தியாகிகள், மிசா போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என 250 பேருக்கு அவர் பொற்கிழி வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் கருணாநிதி சிலையினை திறந்துவைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை என அறிவித்து அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்தவர் கருணாநிதி. ஆனால், 2011ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக அரசு வேதனையையே பரிசாக அளித்துவருகிறது.
கரோனா தொற்று பரவும் முன்னே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சட்டப்பேரவையில் நானும், பொதுச்செயலாளர் துரைமுருகனும் கோரினோம். ஆனால், அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் வயதானவர்கள் மட்டுமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கரோனா மரணத்திலும் பொய்கணக்கு காட்டிவருகிறது அதிமுக அரசு. இந்த கரோனா காலகட்டத்திலும் மாநில அரசின் கொள்ளை ஜரூராக நடைபெற்றுவருகிறது.
பாஜக அரசுக்கு அடிமையாக இருக்க இவர்கள் தயராக இருப்பதால், அதிமுக அரசை பாஜக பாதுகாக்குகிறது. அமைச்சர்கள் ஒவ்வொருவரும் செய்துள்ள ஊழலை பட்டியல் போட்டால் அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். குட்கா வழக்கு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவடா வழக்கு என அனைத்தும் இன்னும் நிலுவையில்தான் உள்ளது.
ஊழல் வாதிகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பதற்காகத் தான் நாம் தற்போது இந்தப்போரை தொடங்கியுள்ளோம். பாஜக அரசுக்கு அடிமையாக தமிழ்நாடு அரசு உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் வளம் நாசமானது. வேலை வாய்ப்பு பறிபோனது, மக்கள் விரோத திட்டங்கள் நம் தலையில் விழுகிறது. மக்களுக்கு வேண்டிய திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில்லை.
மாநில உரிமைகள் பறிபோய் விட்டது. ஊழல் செய்வதவர்கள் சிறைசெல்வதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பு சென்னை கோட்டையை புதிய கோட்டையாக மாற்றிக்காட்டுவோம் என நாம் ஒவ்வொருவரும் சபதம் ஏற்கவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ”மத்திய அரசின் பாதத்தில் பூனையாக ஆட்சியை ஒப்படைத்துவிட்டார் எடப்பாடி” - ஸ்டாலின்